கறம்பக்குடி, நவ. 13: கெண்டையன்பட்டி கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே துவார் ஊராட்சியில் துவார், கெண்டையன் பட்டி, குழவாய் பட்டி, ஆண்டி குழப்பன் பட்டி, பெத்தாரி பட்டி போன்ற பல்வேறு கிராமங்கள் காணப்பட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சி யில் கெண்டையன்பட்டி கிராம மக்களின் நுகர்வோர்களின் நலன் கருதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய அங்காடி கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. இதன் மூலம் நுகர்வோர்கள் பெரிதும் பயன் பெற்று வந்தனர்.நாளடைவில் கெண்டையன் பட்டியில் உள்ள அங்காடி கட்டிடம் பழுதடைந்து பராமரிப்பின்றி சிமெண்ட் பூச்சுக்கள் பெயர்ந்து எந்த நேரத்திலும் ஆபத்தை ஏற்படுத்த கூடிய நிலையில் உள்ளது.
அங்காடி, தற்போது வாடகைக்கு வேறொரு கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொது மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். பழுதடைந்து பராமரிபின்றி காணப்படும் அங்காடி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று கெண்டையன் பட்டி கிராமத்தை சேர்ந்த அனைத்து தரப்பினரும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
