பொன்னமராவதி, நவ.13: பொன்னமராவதி அருகே காட்டு விலங்குகளால் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சி காவக்காடு பகுதிகளை சுற்றியுள்ள மணத்தொண்டி, அரசமங்கலம், பிடாரம்பட்டி வடக்கிப்பட்டி,பரமன்குடம், செமலாபட்டி சாத்தங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பட்டா நிலங்களில் உள்ள பயிர்களை காட்டு விலங்குகளான காட்டெருமை, மான் போன்றவை நாசப்படுத்தி வருவதாகவும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதனால் விவசாயிகளுக்கு பெரிய இழப்பு ஏற்படுவதாகவும் இதனை கருத்தில் கொண்டு காவக்காடு சுற்றியுள்ள விவசாய பகுதிகளில் மின்வேலி அமைத்து தர வேண்டும், இந்த காட்டு விலங்குகளால் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
