திருமயம், செப். 9: திருமயம் அருகே கிணற்றுக்குள் மூன்று நாட்களாக தவித்த கன்று குட்டியை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மணவாளிக்கரை பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றுக்குள் கன்றுக்குட்டி கிணற்று நீரில் மிதப்பதாக தீயணைப்புத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்று நீரில் மிதந்த கன்று குட்டியை உயிருடன் மீட்டனர்.
பின்னர் கன்று குட்டி தொலைந்து 3 நாட்களுக்கு மேல் ஆகியதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். எனவே கன்று குட்டி மூன்று நாட்களாக கிணற்று நீரில் தத்தளித்து உள்ளது என தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். மேலும் கன்று குட்டிக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் அதனை சரி செய்ய கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவித்த போது உரிய பதில் தரவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். பின்னர் கன்று குட்டி மீட்க உதவிய தீயணைப்புத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


