புதுக்கோட்டை, ஆக. 8: புதுக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைசார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருங்குடியில் திருநங்கைகள் 10 பேருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனையில், வெற்றி வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டித் தர வேண்டும் என திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்புக் குறைகேட்புக் கூட்டத்தில், திருநங்கைகள் நலச் சங்கத்தின் செயலர் ரெ.ஷிவானி இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினார். கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் அருணா தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைச்சாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் லோகநாயகி, மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சித்ரா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.



