திருமயம், ஆக. 5: திருமயம் அருகே குடியிருப்புக்குள் சுற்றிதிரிந்த மலைப்பாம்பு தீயணைப்புத் துறையினர் லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலை மேலவயல் கிராம குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு சுற்றித் திரிவதாக திருமயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் புதர் செடிக்குள் பதுங்கி இருந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.
பின்னர் சாக்கு பையில் போட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து மலைப்பாம்பை வனத்துறையினர். அடர்ந்த காட்டுப்பகுதியில் விட்டுச் சென்றனர். இந்நிலையில் திருமயம், பொன்னமராவதி பகுதிகளில் அடிக்கடி மலைப்பாம்பு குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதாகவும் அவ்வாறு குடியிருப்பு பகுதிக்கு நுழையும் மலைப்பாம்பை கண்டால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
