அறந்தாங்கி, அக்.28: அறந்தாங்கி அரசு போக்குவரத்துதுறை பணிமனை முன்பு சிஐடியூ தொழிற் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் தமிழக அரசை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒப்பந்த நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். 2003க்கு பின் பணியில் சேர்ந்தவருக்கு ஒப்பந்த அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தனியார் மூலம் மின்சார பேருந்து இயக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சார பேருந்துகளை முழுமையாக இயக்க வேண்டும். வெற்றிப் பயணம் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போக்குவரத்து படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


