திருமயம், செப்.28: அரிமளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் மோதி ஒருவர் பரிதாபமாக இறந்தார். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள தள்ளாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்வேலு (57). இவர், நேற்று அறந்தாங்கி- காரைக்குடி சாலையில் கே.புதுப்பட்டி அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி வழியாக மதுரைக்கு அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் பஸ்சுக்கு முன்னே சென்ற டூ வீலர் ஒன்று கவனக்குறைவாக சாலையை கடந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த டூ வீலர் மீது பஸ் மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பி உள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் வேலூவின் பைக் மீது மோதி சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் வேலு படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதேசமயம் பஸ் பள்ளத்தில் இறங்கியதால் பஸ்சின் சக்கரங்கள் முறிந்து கழன்று போயின. பின்னர் கிரேன் உதவியுடன் விபத்துக்குள்ளான பஸ் மீட்கப்பட்டது. இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


