புதுக்கோட்டை, செப்.25: தமிழர் வாழ்வின் ஒரு அங்கமாக விளங்கும் பனை மரங்களை வளர்ப்பதற்கு நீர் நிலைகள் மற்றும் வரப்பு ஓரங்களில் அதிகளவில் பனை விதைகளை நட்டு வளர்க்குமாறு பொதுமக்களை புதுக்கோட்டை கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரம், தமிழர்களின் வாழ்வியலோடும், பண்பாட்டோடும், பாரம்பரியத்தோடும் நெருங்கிய தொடர்புடையது. பனை மரத்தின் மூலம் பனை வெல்லம், பனை சர்க்கரை, பதநீர் மற்றும் நுங்கு போன்ற உணவுப் பொருட்கள் கிடைப்பதோடு, அதன் ஓலைகள்,மேற்கூரை அமைக்கவும், ஜாடிகள், பாய்கள், கைவினைப் பொருட்கள் செய்யவும் பயன்படுத்தப்பட்டு, தமிழர் வாழ்வின் ஒரு அங்கமாக விளங்குகிறது. கஜா புயல் தமிழ்நாட்டைத் தாக்கியபோது, பிற மரங்கள் பாதிக்கப்பட்டபோதிலும், பனை மரங்கள் பாதிக்கப்படாமல் கடலோரப் பகுதிகளில் நிலைத்து நின்றன. மண் வளத்தை அதிகரிக்கவும், மண் அரிப்பைத் தடுக்கவும், நீர் சேமிப்பை அதிகரிக்கவும் அனைத்து வகையான மண்ணிற்கும் உகந்த மரமாக பனை விளங்குகிறது.
+
Advertisement


