Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அங்கன்வாடி கட்டிடம் இல்லாததால் சமுதாய கூடத்தில் கல்வி கற்கும் குழந்தைகள்

திருமயம், ஜூன் 26: திருமயம் அருகே அடிப்படை வசதிகள் இல்லாததால் சமுதாயக் கூடத்தில் குழந்தைகள் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள அரசம்பட்டி கிராமத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருந்த அங்கன்வாடி கட்டிடம் இடிக்கப்பட்டது. இதில், அந்த இடத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்களிடம் மனு அளித்தனர். இந்நிலையில் குழந்தைகளின் படிப்பு பாதிக்க கூடாது என்பதற்காக பொதுமக்கள் பழைய அங்கன்வாடி கட்டிடத்தில் உள்ள குழந்தைகளை தற்காலிகமாக அருகே உள்ள சமுதாயக் கூடத்தில் படிக்க ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களாக புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டாத நிலையில் சமுதாயக் கூடத்தில் தரையில் அமர்ந்து குழந்தைகள் கல்வி கற்கும் நிலை உள்ளது.மேலும் இந்த சமுதாய கூடத்தில் குழந்தைகளுக்கு தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி இல்லாமல் மிகவும் சிரமத்துடன் கல்வி கற்று வருகின்றனர். இதனிடையே அவ்வப்போது சமுதாய கூடத்திற்குள் குரங்குகள் புகுந்து குழந்தைகளுக்கு வைக்கப்பட்டிருந்த முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று விடுவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் குழந்தைகள் குரங்குகள் எப்போ வருமோ என்ற அச்சத்திலேயே இருப்பதால் குரங்குகளை கண்டு குழந்தைகளும் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுவரை புதியதாக அங்கன்வாடி கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து அங்கன்வாடி கட்டிடத்தில் தண்ணீர் வசதி கூட இல்லாமல் படிக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பழைய கட்டிடம் இடிக்கப்பட்ட இடத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை கட்டி குழந்தைகளுக்கு பாதுகாப்பான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.