புதுக்கோட்டை, செப். 25: புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதுமான அளவு இருப்புவைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது எனவும் சில்லரை விற்பனையாளர்கள் உரங்களை விற்பனை முனையக்கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மொத்த மற்றும் சில்லரை உரிமம் பெற்ற உர விற்பனையாளர்கள் மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்வதோ அல்லது பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதோ கூடாது.
மேலும், இது தொடர்பான ஆய்வின்போது கண்டறியப்பட்டாலோ அல்லது புகார் ஏதும் பெறப்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக கொள்ளப்படுகிறது. உர உரிமம் பெற்ற மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் கவனத்திற்கு உர விற்பனை உரிமத்தில் அனுமதி பெற்ற நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து, அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே இருப்பு வைத்து விற்பனை செய்திட வேண்டும்.
உர விற்பனையாளர்கள் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை கொள்முதல் செய்வதும், விவசாயிகளுக்கு விற்பனை செய்வதும் கூடாது. உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மேல் உரங்களை விற்பனை செய்யக்கூடாது. விற்பனை நிலையத்தில் உர இருப்பு மற்றும் விலை விபர பலகையினை விவசாயிகளின் பார்வையில் படும்படி வைத்து தினசரி பராமரிக்கப்பட வேண்டும்.


