விபி-ஜி ராம் ஜி திட்டத்தில் வேலைநாட்கள் குறைவு: கிராம மக்களின் வருவாயை முடக்கிய ஒன்றிய அரசு ஊதிய விவரங்களை வெளிப்படையாக அறிவிக்குமா?
கந்தர்வகோட்டை, ஆக.20:புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதி கிராமங்கள் அதிக அளவில் கொண்ட பகுதி இங்கு விபி-ஜி ராம் ஜி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலைநாட்கள் குறைந்துள்ளதாகக் கூறி கிராமப்புற பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால், இத்திட்டத்தை நம்பி வாழும் ஏழை மற்றும் கூலித் தொழிலாளர்கள் வருமானம் இன்றி அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கிராமப்புறங்களில் விவசாயப் பணிகள் இல்லாத காலங்களில் ஊரக வேலைவாய்ப்பு திட்டம், ஏழை குடும்பங்களுக்கு முக்கியமான வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. தினக்கூலி தொழிலாளர்கள், பெண்கள் உள்ளிட்ட பலர் இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பை நம்பி குடும்பச் செலவுகளை சமாளித்து வருகின்றனர். இந்த நிலையில், வேலைநாட்கள் குறைக்கப்பட்டதாகக் கூறப்படுவதால், தொடர்ந்து வேலை கிடைக்காமல் குடும்பங்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், வேலைநாட்கள் குறைவது தங்களின் பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தி ஆண்டு ஒன்றுக்கு 200 நாட்கள் பணி வழங்க வேண்டும் என கேட்டுகொள்கிறார்கள். கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு போதுமான வேலைநாட்களை உறுதி செய்ய வேண்டும். வேலை கேட்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உரிய காலத்தில் வேலை வழங்குவதுடன், வேலைநாட்கள் மற்றும் ஊதியம் தொடர்பான விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஊரக வேலைவாய்ப்பு பணி இல்லாததல் குழு கடன்கட்ட இயலாமல் பெண்கள் சிரமம் அடைகிறார்கள் எனவே சென்ற ஆட்சியை போல் அதிக அளவில் பணி வழங்க சமூக ஆர்வளர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.



