Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பொன்னமராவதியில் 16 மாதத்திற்கு மேல் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பேருந்து நிலைய மேம்பாட்டு பணி

பொன்னமராவதி,ஆக.20: பொன்னமராவதி பேருந்து நிலையம் மேம்பாட்டு பணி ஆமை வேகத்தில் நடப்பதை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகராட்சியில் பேருந்து நிலையம் நகரின் மையப்பகுதியில் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு தினசரி புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை மாவட்டங்களைச்சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தமிழகத்தில் வாரம் இருநாட்கள் சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில் சந்தை கூடுவதால் இந்த பேருந்து நிலையத்திற்கு கூடுதல் பொதுமக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையமாக உள்ளது.

இந்த பேருந்து நிலையத்திற்கு சென்னை, கோவை, சிதம்பரம், திருப்பூர், திருச்சி, மணப்பாறை, திருப்பத்தூர், புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர், துவரங்குறிச்சி, சிவகங்கை, காரைக்குடி, திருமயம், சடையம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் வந்து செல்கின்றனர். இந்த பேரூந்து நிலையம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்ட நிதி ரூ.2.94 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிக்கு கடந்த திமுக ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 19-2-2025 ல் அப்போதைய அமைச்சர் ரகுபதி தலைமைவகித்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதனையடுத்து பேருந்து நிலையம், இங்கு செயல்பட்டு வந்த கடைகள் மூடப்பட்டது. மேலும் இங்கு செயல்பட்ட பேருந்து நிலையம் அழகியநாச்சியம்மன் கோயில் முன்பு செயல்பட்டு வருகிறது.

பேருந்து நிலைய மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டது 16 மாதத்திற்கு மேல் ஆகியும் இந்த பணி முடிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது கடந்த மாதம் இந்த மேம்பாட்டு பணி மீண்டும் தொடங்கப்பட்டு செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த பணி ஆமைவேகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த பேருந்து நிலையம் செயல்படாமல் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று பேருந்து பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் பேருந்து நிலைய கடைக்காரர்களும் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் இந்த பேருந்து நிலைய மேம்பாட்டு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பயணிகள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.