Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

புதுக்கோட்டை உர விற்பனையாளர்கள் தேவையற்ற இடுபொருட்களை சேர்த்து விற்பனை செய்யக்கூடாது

புதுக்கோட்டை, ஆக.20: புதுக்கோட்டை மாவட்ட உர விற்பனையாளர்கள் உரங்கள் இருப்பு மற்றும் விலை விவர பலகையை தினந்தோறும் பராமரிக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

உர இருப்பு விபரம்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிர், மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, கரும்பு, தென்னை, காய்கறிகள், மா, வாழை மற்றும் மரவள்ளி கிழங்கு ஆகிய பயிர்களுக்கு தேவையான உரங்கள் மாவட்டத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உர உரிமம் பெற்ற மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் கவனத்திற்கு? மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்புவதோ, பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யவோ கூடாது. விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டிற்கு மானிய உரங்களை வழங்கக்கூடாது.

உர விற்பனை உரிமத்தில் அனுமதி பெற்ற நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து, அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே இருப்பு வைத்துவிற்பனை செய்திட வேண்டும். உரிமத்தில் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை இருப்பு வைத்து விற்பனை செய்தல் கூடாது, உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மேல் உரங்களை விற்பனை செய்யக்கூடாது.

விற்பனை நிலையத்தில் உர இருப்பு மற்றும் விலை விபர பலகையினை விவசாயிகளின் பார்வையில் படும்படி வைத்து தினசரி பராமரிக்கப்பட வேண்டும். உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் மட்டும் விற்பனை செய்திட வேண்டும். விவசாயிகளுக்கு தேவையற்ற இடுபொருட்களை இணைத்து விற்பனை செய்யக்கூடாது. தரமற்ற மற்றும் போலியான உரங்களை விற்பனை செய்தல் கூடாது. விவசாயிகளுக்கு தேவைக்கு அதிகமாக உரங்களை விநியோகம் செய்யக்கூடாது. மேலும், விவசாயிகளுக்கு தரமான உரங்கள் விநியோகம் செய்யப்படுகிறதா என உர ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ளும் பொழுது, உரங்களை, அதிக விலைக்கு விற்பனை செய்தல், விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்களை விற்பனை செய்தல், உரம் கடத்தல், பதுக்கல் ஆகிய செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அத்தியாவாசிய பண்டங்கள் சட்டம் -1955 உரக்கட்டுபாட்டு ஆணை - 1985 மற்றும் உர நகர்வுகட்டுப்பாட்டு ஆணை 1973 ஆகியவற்றின்படி கடும்நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மீறினால் உர உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் அருணா, தெரிவித்துள்ளார்.

இருப்பு

ரசாயன உரங்களான யூரியா-5520 மெட்ரிக் டன்கள், டிஏபி-1346 மெட்ரிக் டன்கள், பொட்டாஷ் -1080 மெட்ரிக்டன்கள், காம்ப்ளக்ஸ்-4377 மெட்ரிக் டன்கள் மற்றும் சூப்பர் பாஸ்பேட்-904 மெட்ரிக் டன்கள் கையிருப்பு உள்ளது.