காலமுறை ஊதியம் வழங்க கோரி தமிழ்நாடு மாநில வாணிப கழக பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்: சிப்காட் அரசு மதுபான குடோன் முன் நடந்தது
புதுக்கோட்டை, ஆக. 14: புதுக்கோட்டையில் அரசு மதுபான குடோன் முன்பாக தமிழ்நாடு மாநில வாணிப கழக பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சிப்காட் அருகே உள்ள அரசு மதுபான குடோன் முன்பாக, தமிழ்நாடு மாநில வாணிப கழக பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
குறிப்பாக இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுபான சில்லறை விற்பனையை தனியார்மயமாக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் மற்றும் ஆன்லைன் மது விற்பனை திட்டத்தைக் கைவிட வேண்டும், அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 50,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசின் கொள்கை முடிவால் மூடப்படும் கடைகளின் பணியாளர்களை, இதர அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் பணியை தனியார் முகமைகள் மூலம் மேற்கொள்வதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், கடைகளுக்கான வாடகை, மின்கட்டணம் மற்றும் இறக்கு கூலி போன்றவற்றை பணியாளர்கள் மீது திணிப்பதைத் தவிர்க்க வேண்டும், டிஜிட்டல் பரிவர்த்தனையை 5% உயர்த்த ஊழியர்களை வற்புறுத்துவதை கைவிட வேண்டும், பணிக்கொடையை உயர்த்தி வழங்கிட வேண்டும், காலி அட்டைப்பெட்டிகளுக்கு 50% கழிவு வழங்க வேண்டும், மற்றும் வாராந்திர, அரசு விடுமுறை நாட்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தனியார் மயமாக்கல் நடவடிக்கையைக் கைவிட்டு, ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டனர்.



