Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருமயம் தாசில்தார் சாலையோர ஆக்கிரமிப்பு தகவல்களை நெடுஞ்சாலைத் துறையிடம் தெரிவிக்க வேண்டும்

திருமயம், ஆக.14: அரிமளம் அருகே நெடுஞ்சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்த தகவல்களை தாசில்தார் நெடுஞ்சாலைத் துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ராயவரத்தில் இருந்து அரிமளம் செல்லும் சாலையில் இருபுறமும் வணிக வளாகங்கள், குடியிருப்பு வாசிகளின் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் கடும் சிரமத்தை சந்திப்பதாக அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்த் என்பவர் நெடுஞ்சாலை துறையினருக்கு புகார் மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் நெடுஞ்சாலை துறையினர் திருமயம் தாசில்தாரிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடம் குறித்து தகவல்களை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட தாசில்தார் இது குறித்து எந்த தகவல்களையும் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் மனு அளித்தவருக்கு இது போன்ற தகவல்களை தெரிவித்துள்ளனர். இதனால் விரத்தியடைந்த கோவிந்த் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கானது நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட சாலையில் ஆக்கிரமிப்புகள் இருப்பின் அதனை திருமயம் தாசில்தார் அளவு செய்து ஆக்கிரமிப்பு செய்துள்ள இடம், நபர்கள் குறித்த தகவல்களை நெடுஞ்சாலை துறைக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில் நீதிபதிகள் கொடுத்த உத்தரவைத் தொடர்ந்து திருமயம் தாசில்தார் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்கள் உள்ளிட்ட தகவல்களை அளவீடு செய்து விரைவில் நெடுஞ்சாலைத்துறையினிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஒப்படைத்த பின்னர் ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் ஆக்கிரமிப்பை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் கால அவகாசம் வழங்கி ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் இந்தத் தீர்ப்பு அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.