பொன்னமராவதி,செப்.8: பொன்னமராவதி கிராமப்புற பகுதியில் விபி-ஜி ஆர்ஏஎம் ஜி திட்டத்தில் இந்த ஆண்டு 6மாதம் ஆகியிம் 20நாட்கள் கூட வேலை வழங்காததால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குமுறுகின்றனர். 100நாள் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் என்பது இந்திய அரசு கொண்டுவந்த வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆகும். இச்சட்டம் 25.05.2005 முதல் அமலாக்கப்பட்டது. முதலில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இது 2009 காந்தியடிகள் பிறந்த நாளன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது. தமிழக கிராமப்புற மக்கள் இதனை 100 நாள் வேலை என்று அழைக்கின்றன.
இத்திட்டத்தின் கீழ் பொதுவேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புறத்தில் 18 வயது நிரம்பிய திறன் சாரா உடல் உழைப்பு செய்ய விரும்பும் கிராமப்புற நபர்கள், கிராம பஞ்சாயத்திடம், விண்ணப்பிக்க வேண்டும். கிராம பஞ்சாயத்தார், தகுந்த விசாரணைக்கு பின்னர், நபரை பதிவு செய்து, அவருக்கான, பணி அட்டையை வழங்குவார். பணி அட்டையில், நபரின் விவரங்கள், புகைப்படத்துடன் இடம் பெற்று இருக்கும். 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு, உட்பட்டு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். இத்திட்டம் ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு வேலை உறுதி அளிக்கிறது. திட்டத்தின் பயன்கள் ஊரக ஏழை மக்களின் வேலைக்கான உரிமை நிலை நாட்டப்படும். கிராமப்புற சமூகப் பொருளாதார உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். ஊரக பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும். தனிநபர் இல்ல கழிப்பறைகள் உருவாக்கப்பட்டு கிராமப்புறங்கள் சுகாதார மேம்பாடு அடையும்.
ஊரக பகுதிகளில் உள்ள மக்கள் இடம் பெயர்வு குறைவதோடு அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். நிழல் தரும் மரங்கள், பயன் தரும் மரங்கள் ஆகியவை நட்டு இயற்கை வளம் மேம்படுத்தப்படும். தினசரி சம்பளம் ரூ.80ல் தொடங்கி தற்போது ரூ.336ஆக அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்குப் பதிலாக ஒரு புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு வளர்ச்சியடைந்த இந்தியா - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத் திட்டம் (கிராமம்) 2025 அதாவது விபி-ஜி ஆர்ஏஎம் ஜி என்று பெயரிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2005ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தைக் கொண்டு வந்தது, இதன் கீழ் கிராமப்புற குடும்பங்களுக்கு ஒரு வருடத்தில் 100 நாட்களுக்கு வேலை உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
புதிய சட்டத்தில் இதை ஒரு வருடத்தில் 125 நாட்களாக அதிகரிக்கப்படும் என தற்போது பாஜக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கிராம ஊராட்சிகளில் தினசரி குறைந்த அளவிலான மக்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகின்றது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஒரு வாரம் மட்டுமே வழங்கப்படுகின்றது. கடந்த ஆண்டு 25நாட்கள் கூட வேலை வழங்கவில்லை. இந்த ஆண்டு தொடங்கி 6மாதம் ஆகிவிட்டது. முழுசா 20நாட்கள் கூட வேலை கொடுக்கவில்லை. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வேலையினை வைத்து நாங்கள் பிழைப்பு நடத்தி வந்தோம் இப்போது மிகவும் சிரமமாக உள்ளது. என 100நாள் பணியார்கள் தெரிவித்துள்ளனர். சட்டம் சொல்வது போல வேலை அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் பாகுபாடு இல்லாமல் வேலை வழங்கவேண்டும் என விவசாய சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


