Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

புதுக்கோட்டையில் ஒவ்வொரு பகுதிகளிலும் குழுக்கள் அமைத்து மழைக்கால நோய்களை கட்டுப்படுத்த வேண்டும்

புதுக்கோட்டை, செப்.8: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் வடகிழக்கு பருவமழை தொடர்பான அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட கலெக்டர் அருணா, தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், மாவட்டத்திலுள்ள அனைத்து மின்கம்பங்களையும் ஆய்வு செய்து, பழுதடைந்த மின்கம்பங்களை உடனடியாக அகற்றி புதிய மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும். தேவையான அளவு புதிய மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை, தயார்நிலையில் இருப்பு வைக்க வேண்டும். சீரான மின்சாரம் வழங்குவதுடன், மின் கம்பி இணைப்புகளை உறுதி செய்து, மின்கம்பிகளுக்கு மேலாக செல்லும் மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.

ஊரக வளர்ச்சித்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களை நேரடியாக ஆய்வு செய்து, ஜெனரேட்டர், மின்சாரம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தற்காலிக மற்றும் நிரந்தர பாதுகாப்பு மையங்களை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தி, கழிப்பறை வசதிகள், தார்ப்பாய்கள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட தேவையான பொருட்கள் இருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். நீர்வளத்துறை சார்பில், கடந்த காலங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும்.

மீட்பு பணிகளுக்கு தேவையான டிராக்டர், மரம் அறுக்கும் இயந்திரம், மணல் மூட்டைகள் உள்ளிட்ட உபகரணங்களுடன், தொடர்புடைய பணியாளர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களைத் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைநீர் தேங்கும் பகுதிகளில் தேவையான மீட்பு உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக சென்று தண்ணீரை அகற்றும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில், அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் நீர் இறைக்கும் வாகனங்கள் பழுதின்றி தயார்நிலையில் இருக்க வேண்டும். நீர் வெளியேற்றும் மோட்டார்கள், மரங்களை வெட்டுவதற்கான மின் அறுப்பான்கள் உள்ளிட்ட மீட்பு உபகரணங்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் தொடர்ந்து மாதிரி ஒத்திகை நடத்த வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் சார்பில், மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள், சிறுபாலங்கள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து தூர்வாரி, அடைப்புகளை சரிசெய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் தேங்கும் இடங்களில் உடனடியாக மீட்பு உபகரணங்கள் மற்றும் பணியாளர்களை அனுப்பி தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலத்தில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுக்க, கொசுப்புழு ஒழிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறை சார்பில், மழைக்காலங்களில் பரவும் நோய்களை கட்டுப்படுத்த தேவையான மருந்துகள், குளோரின் மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் படுக்கை வசதிகளை போதுமான அளவில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைக்கால நோய்களை கட்டுப்படுத்த குழுக்கள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை ஆகியவை தேவையான அளவு மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு கம்புகளை இருப்பு வைத்திருக்க வேண்டும். வடகிழக்குப் பருவமழையின்போது ஏற்படக்கூடிய வெள்ளம், மின்தடை, சாலை பாதிப்பு, பயிர் மற்றும் கால்நடை சேதம், நோய் பரவல் உள்ளிட்ட அனைத்து வகையான பாதிப்புகளையும் எதிர்கொள்ளும் வகையில், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து தேவையான உபகரணங்கள், பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு மையங்களை முழுமையாகத் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைச்சாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமால், மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம், நெடுஞ்சாலைத்துறை மற்றும் பிறத்துறையைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.