பொன்னமராவதி,ஆக7: பொன்னமராவதி அருகே கொன்னைப்பட்டியில் 21வயது உடைய 500 ஜல்லிக்கட்டில் பங்குபெற்று வெற்றிவாகை சூடிய கோயில் காளைக்கு ஓய்வு விழா நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டி காவல் தெய்வங்களான ஆலமேட்டான், பிடாரி கருப்பர் அருளாசியுடன் 500 களங்கள் சென்று அத்தனை மஞ்சுவிரட்டிலும், ஜல்லிக்கட்டுப்போட்டிகளிலும் வெற்றி வாகைசூடிய கொன்னைப்பட்டி ஊர் கோவில் காளையான கருப்பன் காளைக்கு களம் 500 என்னும் தலைப்பில் வெற்றிவிழாவும், காளைக்கு ஓய்வு அளித்து நிறைவுவிழாவும் கொன்னைப்பட்டி இளைஞர்கள், ஊர்ப்பொதுமக்களால் கொண்டாடப்பட்டது.
கருப்பன் காளை சென்ற களம் எல்லாம் வெற்றி, பெற்றுவந்த தங்கக்காசுகள், வெள்ளிக்காசுகள், பீரோக்கள், சைக்கிள்கள், கட்டில்கள் அண்டாக்கள், குக்கர்கள் என அனைத்தையும் நினைவுகூர்ந்து பொதுமக்களால், இளைஞர்களால் கலைவிழா நிகழ்த்தி காளையின் வயதான 21 ஐக் குறிக்கும் வகையில் 21கிலோவில் கேக்வெட்டி கருப்பன் காளைக்கு நிறைவுவிழாச் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. கருப்பன் காளையை இளைஞர்கள் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் பராமரித்துப் பாதுகாத்துவருகின்றனர். கருப்பன் காளையை ஊர்ப்பொதுமக்கள் தெய்வமாக வழிபட்டுவருவது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் பங்கேற்க வெளிநாட்டில் வசிக்கும் இளைஞர்கள் தங்களின் கிராமத்திற்கு வருகைபுரிந்து கருப்பன் காளையை வழிபட்டுச்சென்றனர்.



