Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் கொளுத்தும் வெயில்

புதுக்கோட்டை, ஜூன் 8: அக்னி நட்சத்திர காலத்தை விட அதிகமாக சுட்டெரிக்கும் வெயிலால் வெப்பதாக் கத்தில் இருந்து தப்பிக்க இளநீர், பழ ஜூஸ்களை மக்கள் வாங்கி பருகி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலம் தொடங்கிவிட்டாலே கோடையை சமாளிக்க பொதுமக்கள் படாதபாடு படுவார்கள். இந்த ஆண்டும் கோடை காலம் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்தே வந்தது. புதுக்கோட்டையில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக கொளுத்தியது. இந்த வெயில் கொடுமையினால் பொதுமக்கள் பகல்நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு தயங்கினர்.

வேறு வழியில்லாத நிலையில் குடை பிடித் துக் கொண்டும், வாகனங்களில் செல்பவர்கள் துணியால் தங்கள் தலையை மூடியபடியும் வெளியில் சென்று வந்தனர். வெளியில் தான் இந்த நிலைமை என்றால் வீடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. பகல் நேரத்தில் வெயில் கொடுமை என்றால் இரவில் வெயிலின் தாக்கத்தினால் புழுக்கம் அதிகமாக இருந்தது. இரவு நேரங்களில் மின் விசிறியில் இருந்து வரும் காற்றும் அனல்காற்றாகவே வந்தது.

அக்னி நட்சத்திரம் என்ற கத்தரி வெயில் கடந்த மாதம் (மே) 4ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நீடித்தது. இந்த நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட் டது. அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையில் வெயிலின் தாக்கம் குறையும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது. அதாவது கடந்த 2 நாட்களாக 100 டிகிரிக்கு மேல் தான் வெயில் கொளுத்துகிறது. அதனால் வெளியே தலை காட்ட முடியாமல் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நேற்று வெயிலின் தாக்கத்தால் சாலைகளில் குறைந்த அளவே மக்கள் நடமாடினர். வெயிலில் சென்று வந்தவர்கள் மிகுந்த சோர்வாகவே காணப்பட்டனர். வெப்ப தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள இளநீர், நுங்கு, கரும்பு ஜூஸ், வெள்ளரி பிஞ்சு, தர்ப்பூசணி, ஐஸ்கிரீம், பழ ஜூஸ்கள், குளிர் பானங்கள் ஆகியவற்றை வாங்கி பருகி மக்கள் தாகத்தை தீர்த்து கொள்கின்றனர்.

இதனால் சாலையோர இளநீர், கரும்பு ஜூஸ், வெள்ளரி பிஞ்சு விற்பனை செய்யும் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பிற மாவட்டங்களில் மழை வந்து வெப்பத்தை தணித்ததை போல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யும் என மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் மழை பெய்யாமல் வெயிலின் தாக்கம் தான் அதிகமாக இருக்கிறது. சற்று ஆறுதலாக கடந்த 2 நாட்களாக காற்று கொஞ்சம் வேகமாக வீசுவதால் வெயிலின் தாக்கம் இருந்தாலும் அதை வாகனங்களில் செல்பவர்களால் ஓரளவுக்கு சமாளிக்க முடிகிறது.வெயிலின் தாக்கம் படிப்படியாக தான் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பதால் எப்போது வெயிலின் தாக்கம் குறையும். மழை எப்போது வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.