புதுக்கோட்டை, செப்.7: புதுக்கோட்டை வட்டாரத்தில் நடைபெற்று வரும் மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு வேளாண்மை உதவி இயக்குனர் அன்பரசன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில், பயிர் சாகுபடி விவரங்களை துல்லியமாக பதிவு செய்து அனைத்து அரசு திட்டங்களும், விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடையும் நோக்கில் மின்னணு பயிர் கணக்கெடுப்பு முறை செயல் படுத்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள 42 கிராமங்களில், நடப்பு காரிப் பருவத்தில் மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது . இதில் பணியாற்ற ஸ்மார்ட் போன் பயன்படுத்த தெரிந்த ஆர்வமுள்ள விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். பயிர் சாகுபடி கணக்கெடுப்புசெய்யும் விவசாயிகளுக்கும் மற்றும் தன்னார்வலர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. அதாவது தரிசு நிலத்தை பதிவு செய்ய ரூ.3ம், பயிர் சாகுபடி செய்யப்பட்டதை பதிவு செய்ய ரூ.5ம், ஒரே உட்பிரிவில் ஊடுபயிர் சாகுபடி இருந்தால், கூடுதலாக உட்பிரிவு ஒன்றுக்கு ரூ.2 வீதம் அதிகபட்சபாக ரூ.9ம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட இருக்கிறது.
இந்த ஊக்கத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் . மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என புதுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அன்பரசன் தெரிவித்துள்ளார் .


