Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

கோடை விடுமுறையை பயனுள்ளதாக்க விளையாட்டு மைதானத்தில் குவியும் மாணவர்கள் கால்பந்து, செஸ், நீச்சல் பயிற்சிகளில் ஆர்வமுடன் பங்கேற்பு

புதுக்கோட்டை, மே 7: புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்கும் வகையில், மாவட்டத்தின் முக்கிய விளையாட்டு மைதானங்களில் பள்ளி மாணவ - மாணவிகள் ஆர்வமுடன் பல்வேறு விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மைதானம் மற்றும் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானம் ஆகிய பகுதிகளில் கோடை கால விளையாட்டுப் பயிற்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 5 வயது சிறுவர்கள் முதல் 11 வயது வரையிலான சிறுவர், சிறுமியர் எனப் பலரும் இந்தப் பயிற்சிகளில் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக கால்பந்து, செஸ், கூடைப்பந்து, கிரிக்கெட், கைப்பந்து மற்றும் குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் ஆர்வமுடன் பயிற்சி பெற்று வருகின்றனர்.

விடுமுறை காலங்களில் வீடுகளுக்குள் முடங்கி டிவி மற்றும் மொபைல் கேம்களில் மூழ்கிக்கிடக்கும் மாணவர்களை மாற்றி, அவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வலிமையாக்கப் பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிகாலையிலேயே குழந்தைகளை எழுப்பி மைதானத்திற்கு அழைத்து வரும் பெற்றோர்கள், அங்கு நடைபெறும் பயிற்சிகளை அருகே இருந்து கண்காணித்து ஊக்கப்படுத்துகின்றனர். வீட்டில் சும்மா இருப்பதைவிட இங்கு விளையாடுவது உடல் உற்சாகத்தைத் தருகிறது. நோய் தாக்குதல் இன்றி ஆரோக்கியமாக இருப்பதை உணர்கிறோம்.

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறைக்கு வழங்கி வரும் சலுகைகளால், படிப்பைத் தாண்டி விளையாட்டிலும் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று விளையாட்டு பயிற்சியில் ஈடுபடும் மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்திலும் பயிற்சி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இது 5 சுற்றுகலான நடைபெற்றுவருகிறது. நீச்சல் என்பது ஒரு சிறந்த உடற்பயிற்சி மட்டுமல்லாது, ஆபத்துக் காலங்களில் தன்னையும் மற்றவர்களையும் பாதுகாக்கும் ஒரு தற்காப்புக் கலை என்பதால், தங்கள் குழந்தைகளை நீச்சல் பயிற்சிக்குச் சேர்க்கப் பெற்றோர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நீச்சல் பயிற்சி செய்வதால் உடலும் மனதும் மிகவும் வலிமையாக உள்ளது. இந்த விடுமுறை எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றும் நீச்சல் பயிற்சியில் ஈடுபடும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். டிவி மற்றும் மொபைல் போனில் மூழ்கிக் கிடக்கும் மாணவர்கள் மத்தியில் விளையாட்டு மைதானத்திற்கு வந்து ஓடியாடி விளையாண்டு உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளும் இந்த மாணவர்களின் செயல் வரவேற்பை பெற்றுள்ளது.