Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கீரனூர் சுற்றுவாட்டார பகுதியில் காலை-மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்

புதுக்கோட்டை, ஜூலை.3: கீரனூர் சுற்றவாட்டார பகுதியில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியை சுற்றியுள்ள வழித்தடங்களில் 25 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கிய பேருந்துகள் மட்டுமே தற்போது இயங்குவதால் அந்த வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி- புதுக்கோட்டையின் மையப்பகுதியில் கீரனூர் உள்ளது. இங்கிருத்து அதனை சுற்றியுள்ள அனைத்து ஊர்களுக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நகர பேருந்துகளை இயக்கி வருகின்றது.

கே.1 பேருந்துகள் கீரனூரில் இருந்து களம்மாவூர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், மாத்தூர், ஏர்போர்ட் ஆகிய வழித்தடங்களில் திருச்சி வரை இயக்கப்படுகிறது. கே.2 பேருந்து கீரனூரில் இருந்து லெட்சுமணன்பட்டி வழியாக திருவரம்பூர் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. கே.3 கீரனூரில் இருந்து தென்னந்திரையன்பட்டி, புலியூர் ஆகிய கிராமங்கள் வழியாக கிள்ளுக்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. கே.4 கீரனூர்- உப்பிலியக்குடி வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. கே.5 கீரனூரில் இருந்து ராப்பூல் வழியாக இலுப்பூர் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. கே.6 கீரனூரில் இருந்து கந்தர்வகோட்டை வழித்தடத்திலும், கே.7 கீரனூரில் இருந்து விராலிமலை வழித்தடத்திலும், கே.8 கீரனூரில் இருந்து கீழையூர் வழித்தடத்திலும், கே.9 கீரனூரில் இருந்து பாக்குடி வழியாக இலுப்பூர் வழித்தடத்திலும், கே.10 கீரனூரில் இருந்து வென்னமுத்துபட்டி வழித்தடத்திலும், கே.11 கீரனூர்- செங்கிப்பட்டி வழித்தடத்திலும், கே.12 கீரனூரில் இருந்து உறவிக்காடு வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

கீரனூரில் இருந்து இயக்கப்படும் நகர பேருந்துகள் பல்வேறு கிராமங்கள் வழியாக சென்று அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் இருந்து நகர் பகுதிக்கு படிக்க வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை சொற்ப அளவிலே இருந்தது. தற்போது அதிகம்பேர் நகர் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்க இந்த நகர பேருந்துகளை தேர்வு செய்து பயணிக்கின்றனர். இவர்களுக்கு இந்த பேருந்துகளை தவிர்த்தால் வேறு வசதிகள் ஏதும் இல்லை என்பது உண்மை. இது குறித்து பயணிகள் கூறியதாவது: தற்போது கிராமங்களில் இருந்து தவிர்க்க முடியாமல் ஏதோ ஒரு பணி நிமித்தமாக நகர் பகுதிக்கு வரவேண்டியுள்ளது. குறிப்பாக திருச்சி- புதுக்கோட்டையின் மையப்பகுதியில் கீரனூர் உள்ளதால் அதிகம் பேர் கீரனூரில் வந்து செல்வதையே முதலில் தேர்வு செய்கின்றனர்.

இதனால் கிராமங்களில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதனால் ஒவ்வொரு பேருந்திலும் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றது. இதற்கு எற்றார்போல் எந்த ஒரு வழித்தடத்திலும் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கவிலை. இதனால் வேலை நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் வருகை அதிகரிப்பதால் அனைத்து நகர பேருந்துகளிலும் படிகட்டில் நின்று கொண்டு ஆபத்தான பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து தகுந்த நடவடிக்கை எடுத்து அனைத்து வழித்தடங்களிலும் கூடுதல் பேருந்துகள் இயக்க தகந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

நடவடிக்கை எடுக்குமா?

கீரனூரில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் நிறம்பி வழிகின்றது. இதனால் அந்த அனைத்து பகுதிகளுக்கு கீரனூரில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வழித்தடத்தில் 100 பேர்களின் நலனுக்காக விடப்பட்ட ஒரு பேருந்தில் தற்போது ஆயிரம் பயணிகள் பேருந்தில் பயணித்து வருகின்றனர். இதனை தவிற்க போக்குவரத்து கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.