Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

உழவர் சந்தை மூலம் இயற்கை வேளாண் விளைப் பொருட்கள் விற்பனை

புதுக்கோட்டை, நவ. 2: புதுக்கோட்டை மாவட்டத்தில் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் உழவர் சந்தைகளில் இயற்கை வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்ய வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை உழவர் சந்தைகளில் பிரதிவாரம் ஞாயிற்றுக்கிழமை, கறம்பக்குடி உழவர்சந்தையில் பிரதிவாரம் வெள்ளிக்கிழமை மற்றும் ஆலங்குடி உழவர் சந்தையில் பிரதிவாரம் வியாழக்கிழமைகளில் உழவர்சந்தை செயல்படும் பகல் நேரத்தில் இயற்கை வேளாண் விளைப் பொருட்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை உழவர் சந்தைகளில் நேற்று இயற்கை வேளாண் விளைபொருட்கள் விற்பனை துவங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை வேளாண்மை அலுவலர்கள் திருமதி.சுபாஷினி, கந்தகிரிவாசன்மற்றும் நிரஞ்சன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் உதவி வேளாண் அலுவலர்கள் சபரீஸ்வரன், அபினா மற்றும் அனுசுயா உடனிருந்தனர். இயற்கை வேளாண்மை விளைப்பொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகள் விதைச்சான்று மற்றும் உயிர்ம சான்றளிப்புத்துறை மூலம் வழங்கப்படும் இயற்கை விவசாயிகளுக்கான சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட வேளாண் பொருட்களை விற்பனை செய்ய விருப்பம் உள்ள இயற்கை விவசாயிகள் அருகில் உள்ள உழவர் சந்தையில் விண்ணப்பித்து, அதற்கான அடையாள அட்டை பெற்றுக்கொண்டு, தங்களது இயற்கை விளைபொருட்களை விற்பனை செய்யலாம். உழவர்சந்தைகளில் விளைபொருட்களை விற்பனை செய்ய எந்தவித கட்டணமும் இல்லை. மின்னணு தராசு இலவசமாக வழங்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விதைச்சான்று மற்றும் உயிர்ம சான்றளிப்புதுறை மூலம் அங்கக சான்று பெற்ற விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இடைத்தரகரின்றி விற்பனை செய்ய மற்றும் நுகர்வோர்கள் நஞ்சில்லா உணவு பெற்று ஆரோக்கியமான வாழ்வு பெற நல்ல வாய்ப்பாக அமையும் என இந்நிகழ்வினை துவக்கி வைத்த வேளாண் வணிகம் மற்றும் விற்பனைதுறையின் துணை இயக்குநர்.ஜெகதீஸ்வரி மற்றும் விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குநர். பிரகாஷ் தெரிவித்தனர்.