Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முளைப்புத்திறன் சரியில்லாத காரணத்தினால் 9 கடைகளில் 11,800 கிலோ விதைகள் விற்பனைக்கு தடை

புதுக்கோட்டை, ஜூன் 2: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டி வழிமுறைகள் குறித்து தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கான விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா வெளியிட்டுள்ளா செய்தி குறிப்பில் கூறியிறுப்பதாவது: விதை சட்டம் 1966 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1985 ஆகியவற்றின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 816 புதுக்கோட்டை மாவட்டத்தில் 618 ஆக கூடுதல் 1,434 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. விதிமுறை மீறல்கள் காணப்படும் விற்பனை நிலையங்களில் உடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் ஜூன் முதல் வாரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு கண்காணிப்பு குழுவினர் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

கடந்த 1.4.2026 முதல் இதுநாள் வரை 9 விற்பனை கடைகள் மூலம் 5.42 லட்சம் மதிப்பிலான 11,800 கிலோ விதைகள் முளைப்புத்திறன் சரியில்லாத காரணத்தினால் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு விற்பனை தடை செய்யப்படும் விதைகள் \”விதையில்லா\” பயன்பாட்டிற்கு அனுப்பப்பட்டுவிடும்.மேலும் விதை சட்ட விதிமீறல்களுக்காக 4 நீதிமன்ற வழக்குகள் தொடுக்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன.அரசு மற்றும் தனியார் விதை விற்பனையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: தங்களின் விதை விற்பனை உரிமத்தை தங்கள் நிறுவனத்தில் காட்சி படுத்தப்பட வேண்டும். விதைகளின் இருப்பு மற்றும் விலை பட்டியல் முகப்பில் வைத்திட வேண்டும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்ற அட்டை பொருத்திய விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தனியார் உண்மை நிலை விதைகளுக்கு முளைப்பு திறன் சான்றினை தவறாமல் ஆய்விற்கு காண்பிக்க வேண்டும். தங்கள் விற்பனை நிலையத்திலும் முளைப்பு திறன் பரிசோதனை போட்டிருக்க வேண்டும். விவசாயிகளுக்கு விதை விற்பனைக்கான உரிய ரசீது கொடுக்க வேண்டும். ரசீதில் விவசாயி பெயர், முகவரி ரகம், சான்று நிலை, குவியல் எண், காலாவதி நாள், கொடுத்த அளவு போன்றவை கட்டாயம் இடம் பெற வேண்டும்.

விற்பனையாளர்கள் ஒரு ரகத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அதனை விவசாயிகளுக்கு விற்பனை செய்யக்கூடாது. விற்பனை செய்யப்படும் விதைகள் மாவட்டத்திற்கும் உரிய பருவத்திற்கும் ஏற்றதா என உறுதிப்படுத்தப்பட்ட பிறகு தான் விற்பனை செய்ய வேண்டும். விதைகளை ரகம் மற்றும் குவியல் எண் வாரியாக ஒரு அட்டியில் ஆறு மூட்டைகள் என்ற வீதத்தில் சுத்தமான இடத்தில் அடுக்கி வைக்க வேண்டும். பூச்சிக்கொல்லிகள், உரங்கள் உள்ளிட்ட ரசாயனங்கள் அருகே விதைகளை சேமித்து வைக்க கூடாது. இருப்பு பதிவேட்டில் இருப்பு கழிக்கப்பட்டு பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.

இருப்பு பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்

ரசீதில் விவசாயி பெயர், முகவரி ரகம், சான்று நிலை, குவியல் எண், காலாவதி நாள், கொடுத்த அளவு போன்றவை கட்டாயம் இடம் பெற வேண்டும்.