ராயனூர் திருமாநிலையூர் சாலையில் கூடுதலாக மின் விளக்கு வசதி அமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கரூர், டிச. 2: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சில குறிப்பிட்ட பகுதிகளில் கூடுதலாக மின் விளக்கு வசதி அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் தேவையான அளவில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதே நேரத்தில், மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை மில்கேட் அடுத்துள்ள வஉசி வடக்குத்தெரு, தாந்தோணிமலை ராயனூர் பிரதான சாலை, ராயனூர் திருமாநிலையூர் சாலை போன்ற சில பகுதிகளில் கூடுதலாக தெரு விளக்கு வசதி அமைத்து தர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் வாகனத்தில் செல்லும் போது, குறைவான வெளிச்சம் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதிச் சாலைகளை பார்வையிட்டு, கூடுதலாக தெரு விளக்கு வசதி அமைத்து தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


