புதர் சூழ்ந்த போலீஸ் குடியிருப்பு
உடுமலை, ஜன.24: உடுமலையில் டிஎஸ்பி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் மாவட்ட வன அலுவலகம், மகளிர் விடுதி, கருவூலம்,பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன. இங்கு தினசரி பொதுமக்கள் வந்து செல்கின்றனர். டிஎஸ்பி அலுவலக வளாகத்தில் போலீஸ் குடியிருப்பு அமைந்துள்ளது.இந்த குடியிருப்பு வளாகத்தில் செடி,கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது.இதனால் விஷ ஜந்துக்கள் நடமாடுவதால் குடியிருப்புவாசிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
குடியிருப்பு வளாகத்தின் பின்புறம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது.அங்கேயும் விஷ ஜந்துக்கள் ஊடுருவி விடுகின்றன. மேலும், அப்பகுதியில் மூங்கில் கூடை பின்னும் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களும் இவற்றால் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் உள்ள புதர்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.