ஆசிரியர், தொழிலாளியிடம் பட்டா கத்தி காட்டி நகை, பணம் பறிப்பு 3 முகமூடி கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை களம்பூர் அருகே இரவு நேரத்தில் கைவரிசை
ஆரணி, ஜன. 24: திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் அடுத்த எட்டிவாடி கிராமம் தந்தை பெரியார் தெருவை சேர்ந்தவர் வீரமணி(40). இவர் திருவண்ணாமலையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். வீரமணி வழக்கம்போல் கடந்த 21ம் தேதி பள்ளிக்கு பைக்கில் வேலைக்கு சென்றுள்ளார். பின்னர், வேலையை முடித்துவிட்டு பைக்கில் இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, ஆலம்பூண்டி கூட்ரோடு அருகே வந்தபோது, ஆரணியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி பைக்கில் முகமூடி அணிந்து வந்த 3 பேர், வீரமணியின் பைக்கை நிறுத்தி வழிகேட்பது போல் நடித்து, அவர்கள் பின்னால் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை காட்டி வீரமணியை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு வேகமாக தப்பிச் சென்றனர்.
இதேபோல், எட்டிவாடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சக்திவேல்(33), இவர், கேளூர் நகை கடையில் வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது, போளூரில் இருந்து ஆரணி-வேலூர் செல்லும் சாலை 3 வழி சந்திப்பு அருகே வந்தபோது, வீரமணியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்து சென்ற கும்பல், சக்திவேலை மடக்கி டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பதுபோல், நடித்து, கத்தியை காட்டி மிரட்டி சக்திவேலிடம் இருந்த செல்போன், தங்க மோதிரம், வெள்ளி செயின் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு வேகமாக தப்பி சென்றனர். இதுகுறித்து, வீரமணி, சக்திவேல் ஆகியோர் களம்பூர் போலீசில் நேற்றுகொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.