ஆந்திர மாநில தொழிலாளி மர்மச்சாவு போலீசார் விசாரணை ஊசூர் அருகே
அணைக்கட்டு, டிச.7: ஊசூர் அருகே கம்பெனியில் வேலை செய்யும் ஆந்திர மாநில தொழிலாளி மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அணைக்கட்டு அடுத்த ஊசூர் கிராமத்தில் தனியார் சவுரி முடி தயாரிக்கும் கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு வேலை செய்து வரும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அதே கிராமத்தில் பிராமணர் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களில் சுப்பிரமணியம்(58) என்ற தொழிலாளி வீட்டு திண்ணையில் மர்மமான முறையில் இறந்த கிடப்பதாக அப்பகுதி மக்கள் நேற்று விஏஓவுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, விஏஓ அசோக் அளித்த புகாரின்பேரில் அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தொழிலாளி சுப்பிரமணியத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விஏஓ அளித்த புகாரின்பேரில் அரியூர் போலீசார் வழக்கு பதிந்து, சுப்பிரமணியம் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது மாடியில் மின்சார கம்பி மீது கை பட்டு தூக்கி வீசப்பட்டு இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.