பெரம்பலூர்,அக்.30: பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற நவ-1 ம்தேதி உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, 121 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட கலெக்டர் அப்துல் ராசிக் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியது: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் வருகிற நவ-1 அன்று உள்ளாட்சிகள் தின கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வட கிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தமிழ்நாடு கிராம மேம்பாடு, மாற்றம் மற்றும் மறுமலர்ச்சி முன்னெடுப்பு, குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் முறையை தடுத்தல், தமிழ்நாடு பல்லுயிர் மேலாண்மைக் குழு குறித்து விவாதித்தல், வளர்ப்புப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல், தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல், சபாசார் வளை தளம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
எனவே வருகிற நவ-1 ம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் அதிகளவில் கலந்து கொண்டு உள்ளாட்சி அமைப்புகளில் வெளிப்படையான நிர்வாகம் நடைபெற்ற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்டக் கலெக்டர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.


