பெரம்பலூர், ஆக. 29: பெரம்பலூரிலுள்ள தனியார் வங்கியில் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக வங்கி உள்ளேயே விழுந்து இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் நகராட்சி, வெங்கடேசபுரம் மெயின் ரோடு பகுதியில், கரூர் வைஸ்யா பேங்க் என்கிற முன்னணி தனியார் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி நேற்று காலை 10 மணிக்கு திறந்து வாடிக்கையாளர் சேவை நடந்து வந்தது.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், எறைய சமுத்திரம் கிராமம், கிழக்குத் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் சரவணன்(33) என்கிற வாடிக்கையாளர் காலை 10:15 மணிக்கு பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது வங்கியின் உள்ளே இதர வாடிக்கையாளர்கள் நடுவே நின்று கொண்டிருந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு கீழே சுருண்டு விழுந்தார். அருகில் இருந்த வங்கி செக்யூரிட்டிகள் மற்றும் இதர வாடிக்கையாளர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து தெளிய வைக்க முற்பட்டனர்.
இருந்தும் எவ்வித பலனும் இன்றி சரவணன் வங்கி உள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கிடைத்தத் தகவலின்பேரில், பெரம்பலூர் டவுன் போலீசார் வங்கிக்குச் சென்று இறந்த சரவணனின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவமனை சவக்கிடங்கிற்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெஞ்சுவலி காரணமாக வங்கி உள்ளே இறந்த சரவணனுக்கு பிரியதர்ஷினி(24) என்கிற மனைவியும், சஷ்டிகா (7) என்கிற மகளும் உள்ளனர்.



