பெரம்பலூர்,நவ.13: வேலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம், வேலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.
இதில் தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற, இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மாயகிருட்டிணன், படிப்பே உயர்வு தரும் எனும் தலைப்பில் சிறப்புரை பேசும் போது, தமிழ் மொழியின் பெருமை குறித்தும், தமிழ்க் கூடல் நிகழ்வின் சிறப்புகள் குறித்தும் எடுத்துரைத்து தமிழ்மொழி தொன்மையான மூத்த மொழி, இலக்கியம் வாழ்க்கையின் மாற்றத்திற்கு அடிப்படை.
நூல்களைப் படிக்க வேண்டும். வாழ்க்கையில் சாதிக்கப் பிறந்தவர்கள் நீங்கள், உங்களால் எதையும் சாதிக்க முடியும். மாதா பிதா குரு தெய்வம் வணங்க வேண்டும். பெற்றோர்களையும் பெரியோரையும் மதிக்க வேண்டும். நன்கு படித்து சாதனை படைக்க வேண்டும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும். தன்னம்பிக்கை, குறிக்கோள், திட்டமிடல் ஆகியவற்றை அவசியம் அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
நிகழ்விற்கு, பள்ளியின் பட்டதாசி ஆசிரியர்கள் இராஜா, துரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள், அலுவலக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளியின் ஆசிரியர் ராஜா வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் வெண்ணிலா நன்றி கூறினார்.
