Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேப்பூர் ஊராட்சி அலுவலகம் முன்பு 100 நாள் வேலை வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

குன்னம், பிப்.13: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கலூர் அகரம் கிராம மக்கள், 100 நாள் வேலை வழங்கக்கோரி வேப்பூர் ஊராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். வடக்கலூர் ஊராட்சிக்குட்பட்ட அகரம் கிராம மக்களுக்கு கடந்த 2025ம் ஆண்டு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஏழு நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதையடுத்து நேற்று மதியம் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்திக்க வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கிராம பொது மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் வந்தனர். ஆனால் அப்போது அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வேப்பூர்-குன்னம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அங்கு வந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆண்டாள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடைந்த கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் வேப்பூர்-குன்னம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.