Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரியலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு வாய் நோய் தடுப்பூசி முகாம்: பயன்பெற கலெக்டர் அழைப்பு

அரியலூர் ஜூன் 29: அரியலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு வாய் நோய் தடுப்பூசி முகாம் பயன்பெற மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். அரியலூர் கலெக்டர் மிருணாளினி செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி (கசப்பு) நோய் இந்நோய் மிக கொடிய வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் இக்கிருமியானது தண்ணீர் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மிக விரைவில் பரவக்கூடியது. நோயின் தன்மை இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாயிலும், நாக்கிலும், கால் குளம்புகளுக்கிடையிலும் புண்கள் ஏற்படும். அவைகள் தீனி உட்கொள்ள முடியாமல் மிகவும் பாதிக்கப்படும். மிகவும் மெலிந்து விடும். வெயில் காலத்தில், நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மூச்சிரைக்கும். தோலின் தன்மை கடினமாகவும், அடர்த்தியான ரோமமும் காணப்படும்.

பால் கறவை முற்றிலும் குறைந்துவிடும். கறவைப்பசுக்களில் பால் குடித்து வரும் கன்றுகள் உடனடியாக இறந்து விடும். மலட்டுத்தன்மை ஏற்படும். கால்நடை வளர்ப்போர்க்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும். எனவே, இந்நோய் தாக்கா வண்ணம் இருப்பதற்கு, மாடுகளுக்கு வருடத்திற்கு இருமுறை தடுப்பூசிப் பணி மேற்கொள்வது ஒன்றே சிறந்த நிவாரணம். இம்மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையினரால், தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழான கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசித்திட்டம் 9வது சுற்றின் கீழ் 01.07.2026 முதல் தொடங்கி 10.08.2026 வரை, அரியலூர் மாவட்டத்தில் உள்ள 1,62,000 கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. ஆதலால், கால்நடைகள் வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும் பொழுது 3 மாதம் வயதுள்ள கன்று முதல் சினை, கறவை உள்ளிட்ட தங்களின் அனைத்து மாடுகளுக்கும் தவறாமல் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட்டுக்கொண்டு, தங்கள் கால்நடை செல்வங்களை இக்கொடிய நோய் வராமல் பாதுகாக்கும்படி, கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.