Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பெரம்பலூரில் விடாது துரத்தும் சோகம்; சிலிண்டர் தீ விபத்தில் கேபிள் ஊழியர் பலி: உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

பெரம்பலூர்: பெம்பலூரில் கடந்த 11ம்தேதி டீக்கடையில் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, நடந்த தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கேபிள் நிறுவன ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 11ம்தேதி செவ்வாய்க் கிழமை பெரம்பலூர் நகரில், ஆத்தூர் சாலையில், டவுன் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள டீக்கடையில் சிலிண்டரில் ஏற்பட்ட கேஸ் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டு 4 பெண்கள் உள்பட 16 நபர்கள் தீக்காயம் ஏற்பட்டது.

தீக்காயமடைந்த திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, பெரம்பலூர் தாலுகா, பொம்மனப்பாடி கிராமத்தை சேர்ந்த மாரிக்கண்ணு மகன் மணிகண்டன்(42) என்பவர் சிகிச்சை பலனின்றி கடந்த 13ம்தேதி இறந்தார். பின்னர் கடந்த 15ம்தேதி கடையில் டீ மாஸ்டராக வேலைபார்த்த, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் தினேஷ்(32) என்பவரும், பெரம்பலூர் நகராட்சி, ரெங்கா நகரை சேர்ந்த முத்துக் கருப்பன் மகன் சகாதேவன்(54) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

17ம்தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, டீக்கடையில் சப்ளையராக வேலைபார்த்த பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுக்கா, கொட்டரை கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் ஆறுமுகம் (50) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். 19ம்தேதி அதிகாலை 2:15 மணிக்கு, திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, சிலிண்டர் விபத்து நடந்த பெரம்பலூர் டீக்கடையில் டீ சப்ளை செய்யும் வேலை செய்து வந்த, பெரம்பலூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி புவனேஸ்வரி(32) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இந்நிலையில் நேற்று (20ம்தேதி) காலை 9 மணிக்கு திருச்சி (கே.எம்.சி) தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, விபத்து நடந்த கடைக்கு சாதாரணமாக டீ குடிக்கவந்த, பெரம்பலூர் கேபிள் நிறுவன ஊழியரான, களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் விஜயகுமார்(47) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதன்மூலம் 11ம்தேதி நடந்த சிலிண்டர் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது குறிப்பிடத் தக்கது. தீக்காயம் அடைந்தவர்களில் இன்னும் 8 பேர் திருச்சி, பெரம்பலூர் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.