Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சுமை தூக்கும் தொழிலாளர்கள் 2ம் நாள் போராட்டம்; ரேஷன் உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

பெரம்பலூர்: சங்க அங்கீகார தேர்தலை உடனே நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் டிஎன்சிஎஸ்சி சுமைதூக்கும் தொழிலாளர்கள் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் 2வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுவதால், பெரம்பலூரில் சாலையோரம் வரிசை கட்டி சரக்கு லாரிகள் அணிவகுத்து நின்று கொண்டிருக்கின்றன.

டிஎன்சிஎஸ்சி சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக, பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு மற்றும் கிருஷ்ணாபுரம், பாடாலூர், அல்லிநகரம் ஆகிய நான்கு இடங்களில் உள்ள டிஎன்சிஎஸ்சி கிடங்குகளில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 18ம்தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது போல், நேற்று (19ம்தேதி) தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க அங்கீகார தேர்தலை உடனே நடத்த வேண்டும், வருகை பதிவேட்டில் பெயர் சேர்க்க வேண்டும், 2022 முன் தேதியிட்டு பச்சை அட்டை வழங்க வேண்டும். 2025 ஜூலை 12ம்தேதியை முன் தேதியிட்டு நிலுவை உள்ள 60 சதவீதம் கூலி உயர்வையும் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் ராம கிருஷ்ணன் தலைமையில், மாவட்டச் செயலாளர் சுப்பிர மணியன் முன்னிலையில் 15 பேர்களும், கிருஷ்ணாபுரம் கிடங்கில் 12 பேர்களும், பாடாலூர் கிடங்கில் 6 பேர்களும், அல்லிநகரம் கிடங்கில் 11 பேர்களும் என மொத்தம் 44 பேர் இந்தத் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர்களின் இந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தால், 2வது நாளாக தனியார் மில்களில் இருந்து இந்த கிடங்குகளுக்கு ஏற்றி வரப்பட்ட சரக்குகள் சுமை தூக்கும் தொழிலாளர்களால் கிடங்குகளில் இறக்கி வைக்கப்படவில்லை. இதன் காரணமாக சாலைகளில் சரக்கு லாரிகள் வரிசை கட்டி 2 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதே போல் கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்படும் பொது விநியோகத் திட்ட உணவு பொருட்களான புழுங்கல் அரிசி, பச்சரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் ஆகியன கொண்டு செல்லப்படாமல் தேங்கிக்கிடந்தன. இந்த வேலைநிறுத்த போராட்டம் தொடரும் பட்சத்தில், ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொதுவிநியாகத் திட்ட உணவுப் பொருட்களை மக்களுக்கு விநியோகிப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.