Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

பெரம்பலூரில் முதல் முறையாக தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி 26 முதல் 30ந் தேதி வரை நடக்கிறது

பெரம்பலூர்,டிச.19: பெரம்பலூரில் முதல் முறையாக பள்ளிகளுக்கிடையே நடைபெறும் 17வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கான 69-வது தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் வருகிற 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் 350 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர் என்று கலெக்டர் மிருணாளினி தெரிவித்தார்.

பெரம்பலூரில் பள்ளிகளுக்கிடையே நடைபெறும் 69 தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா முன்னிலை வகித்தார்.

கூட்டத்திற்கு கலெக்டர் மிருணாளினி தலைமை வகித்துப் பேசியதாவது:

பள்ளிகளுக்கிடையே நடைபெறும் 69வது தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வருகிற 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு நடத்தப்படும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் வருகை தர உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய அளவிலான போட்டிகள் நடத்தப்படுவது பெருமைக்கு உரியதாகும். பெரம்பலூர் மாவட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருகை தர 175 மாணவர்கள், 175 மாணவிகள், போட்டிகளை நடத்த உள்ள 140 அலுவலர்கள் என மொத்தம் 490 பேர் தங்குவதற்கு தேவையான அனைத்து எற்பாடுகளையும் முறையாக ஏற்பாடு செய்திட வேண்டும். அவர்களுக்கான உணவு, தங்குமிடம், குடிநீர், கழிவறைகள் என அனைத்து தேவைகளையும் நிவர்த்தி செய்திடும் வகையில் தங்குமிடம் இருக்க வேண்டும். தங்கும் இடத்திலிருந்து மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து வரவும், மீண்டும் அவர்களை தங்குமிடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும் போதிய பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

மாணவ, மாணவிகள் தங்கும் இடத்தில் 24 மணி நேரமும் சுழற்சிமுறையில் அலுவலர்கள் பணியில் இருக்கவேண்டும். அதேபோல, ரயில் மார்க்கமாக வருபவர்களை திருச்சிராப் பள்ளி ரயில் நிலையத்தில் இருந்தும், விமானம் மூலம் வருபவர்களை திருச்சிராப் பள்ளி விமான நிலையத்தில் இருந்தும் பெரம்பலூருக்கு அழைத்து வர போதிய வாகன ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். போட்டி நடைபெறும் இடம் மற்றும் மாணவ மாணவிகள் தங்கும் இடத்திலும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

போட்டி நடைபெறும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் போதிய குடிநீர், கழிவறைகள் இருப்பதை மாவட்ட விளையாட்டு அலுவலரும், நகராட்சி ஆணையரம் உறுதி செய்திட வேண்டும்.தேசிய அளவிலான போட்டியினை நடத்துவதற்கு நமது மாவட்டத்திற்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்தி சிறப்பாக இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்திட அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய்அலுவலர் கண்ணன், முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பொற்கொடி மற்றும் போக்கு வரத்துத்துறை, கல்வித்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.