பெரம்பலூர், ஆக. 18: பெரம்பலூரில் நடந்த விழாவில் அரியலூர் அரசுக் கல்லூரி வணிகவியல் துறைத் தலைவர் துரை. இளங்கோவன் எழுதிய கவிதை நூலை பெரம்பலூர் மாவட்ட தமிழ்வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சுகன்யா வெளியிட்டார். பெரம்பலூரில் பதியம் இலக்கியச் சங்கமம் சார்பில் அரியலூர் அரசுக் கல்லூரி வணிகவியல் துறை தலைவர் எழுத்தாளர் துரை. இளங்கோவன் எழுதிய, \”கவிதைக் காற்றின் கனவுப் பயணம்\” கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அரியலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் இணைப் பேராசிரியர் தமிழ்மாறன் தலைமைவகித்தார். கதை நூலினை பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குனர் சுகன்யா வெளியிட, முதல் நூலினை பதியம் இலக்கியச் சங்கமத்தின் புரவலர் சாரங்கபாணி பெற்றுக் கொண்டார்.
தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சுகன்யா பேசியதாவது : தமிழ் இலக்கிய வடிவங்களில் தனித்துவம் படைத்தது கவிதை.ஓசை நயம் மிக்க சந்தக் கவிதைகள் எல்லோர் மனதையும் எளிதில் ஈர்த்துவிடுகின்றன. மரபுக் கவிதைகள் எப்போதும் நெஞ்சில் நிலைத்திருக்கும்.சந்த நயமிகு கவிதைகள் திரைப்பட பாடல்களுக்கு அடிப்படையாகும். மோனை, எதுகை, இயைபு என தொடை நயங்கள் சந்தக் கவிதைகளை மெருகேற்றுகின்றன. எளிய சொல்லாடல்களுடன் எழில்மிகு கவிதைகளாக சந்தக் கவிதைகள் வலம் வருகின்றன. கவிதைகளோடு வாழ்பவர்கள் சீரான இதயத் துடிப்பை பெற்று இனிய வாழ்வியலை துய்க்கின்றனர். சந்த நயமிகு கவிதைகளை இளைய தலைமுறையினர் இயற்றிடவேண்டும். இளைஞர்களிடமிருந்து நிறைய நூல்கள் வெளிவர வேண்டும் என்றார்.
விழாவில் பெரம்பலூர் வரலாற்று நூல் ஆய்வாளர் ஜெயபால் ரத்தினம் முன்னிலை வகித்தார். கடலூர் மாவட்டம் இறையூர் கனகசபை மழலையர் பள்ளி தாளாளர் சண்முகம் நூலினை அறிமுகம் செய்தார். அரியலூர் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் ரவிச்சந்திரன், சித்த மருத்துவர் கோசிபா, தாழை கவிஞர் அங்கமுத்து வாழ்த்துரை பேசினர்.அரியலூர் அரசு கலைக் கல்லூரியின் வணிகவியல் துறைத்தலைவரான நூலாசிரியர் துரை இளங்கோவன் ஏற்புரை பேசினார்.
பெரம்பலூர் சாரதா மகளிர் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் கௌசல்யா, தலைமை ஆசிரியை மலர்க்கோடி, தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் மாரிமுத்து, கல்லூரி நூலகர் சுரேஷ்பாபு, பண்பலை வானொலி நிலைய இயக்குனர் இளையவேணி, தமிழாசிரியர் வசந்த மல்லிகா, ரோவர் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் செந்தில் குமரன், தூயவளனார் பள்ளி தமிழாசிரியர் சுனில் சகாயராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக ஆலம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர் மாயகிருஷ்ணன் வரவேற்றார். அரியலூர் அரசு கலைக் கல்லூரி தமிழாய்வுத்துறை கௌரவ விரிவுரையாளர் வசந்தி நன்றி தெரிவித்தார்.



