Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பெரம்பலூர் - அரியலூர் மாவட்ட விவசாயிகள் ஆடிப்பட்ட சாகுபடி விதைகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

பெரம்பலூர், ஜூலை 17: இன்று விதைப்புப் பணிகளுக்கு ஏற்ற ஆடிமாதம் பிறக்கிறது என்பதால் ஆடிப்பட்ட சாகுபடிக்கு விதைப் பரிசோதனை செய்திட வேண்டும் என்று பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களுக்கான விதைப் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் ஆஷா லதா, அம்பிகா ஆகியோர் கேட்டுக்கொண்டள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :

இன்று விதைப்பு பணிகளுக்கு ஏற்ற ஆடிமாதம் பிறக்கிறது. ஆடிப்பட்டம் தேடி விதை என்கிற முதுமொழிக்கேற்ப பெரும்பாலான விவசாயிகள் அடுத்து வரக்கூடிய மழையை கருத்தில் கொண்டு ஆடி மாதத்தில் விதைப்புப் பணிகளை மேற்கொள்வார்கள்.

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கான விதைப் பரிசோதனை நிலையமானது பெரம்பலூர் புது பஸ்டாண்டுக்குத் தெற்கே, மாவட்ட மைய நூலகத்தின் மேற்குப் பகுதியில் செயல் பட்டு வருகிறது. இந்த விதைப் பரிசோதனை நிலையத்தில், விதைகளின் தரம் அறிய நிர்ணய காரணிகளான, முளைப்புத்திறன், புறத் தூய்மை, ஈரப்பதம் மற்றும் பிற இரக கலப்பு ஆகியவை ஆய்வு செய்யப் படுகின்றன. நடப்பு 2026- 2027 ஆம் ஆண்டில் பெரம்பலூர் விதைப் பரிசோதனை நிலையத்திற்கு, 2667 விதைமாதிரிகள் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதில் இதுவரை 538 விதை மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 25 விதை மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளன.

ஆடிப்பட்டம் சாகுபடி செய்ய உள்ள மக்காச்சோளம், பருத்தி, நெல், சோளம், உளுந்து, பயறு வகை பயிர்கள், வரகு மற்றும் நிலக்கடலை ஆகிய விதைகளின் தரம் நல் விளைச்சலுக்கு ஆதாரம். ஆகவே விவசாயிகள் சாகுபடி செய்யப்படவுள்ள விதை குவியலில் இருந்து, மாதிரி விதைகளை எடுத்து, துணிப்பையில் இட்டு, விபரத் தாளில் பயிர், இரகம், குவியல் எண் போன்ற விவரங்களுடன் பரிசோதனை நிலையத்தில் ரூ80 வீதம் ஒரு விதை மாதிரிக்கு செலுத்தி விதையின் தரத்தினை பரிசோதனை முடிவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். முளைப்புத் திறன் மூலம் வாலிப்பான நாற்றுகள், இயல்பற்ற நாற்றுகள், கடின விதைகள், இறந்த விதைகள் எத்தனை சதவீதம் உள்ளது என்பதைக் கண்டறியலாம். விதைப் பரிசோதனையின் முடிவுகள் பரிசோதனைக்கு அனுப்பிய விவசாயிகளின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களுக்கான பெரம்பலூர் விதைப் பரிசோதனை நிலையத்தின் வேளாண்மை அலுவலர்கள் ஆஷா லதா மற்றும் அம்பிகா ஆகியோர்இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.