Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பெரம்பலூரில் உள்ள 2 லட்சம் ஏக்கர் நிலத்தில் ஆடி மாத கோடை உழவு செய்வது மிகவும் நல்லது விதை சான்றளிப்பு ஆய்வாளர் அறிவுறுத்தல்

பெரம்பலூர், ஜூலை 13: “ஆடிப்பட்டம் தேடி விதை” என்னும் பழமொழிக்கு ஏற்ப தற்போது கோடை உழவு செய்வது மிக நல்லது என்று பெரம்பலூர் மாவட்ட விதைச் சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்பு ஆய்வாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது: வருகிற 17ம்தேதி விதைப்புக்கு உகந்த ஆடி மாதம் பிறக்கிறது. “ஆடிப் பட்டம் தேடி விதை” என்னும் பழமொழிக்கு ஏற்ப தற்போது உழவு செய்வது மிக நல்லது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2,02,500 ஏக்கர் மானாவாரி நிலங்களிலும் தற்போது ஆடிப் பட்டத்தையொட்டி உழவு செய்வது மிக நல்ல பலனைக் கொடுக்கும். குறிப்பாக தற்போது வெப்பநிலை மாற்றத்திற்கு ஏற்ப தமிழகத்தில் மழையின் அளவு வழக்கத்தைவிட குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், கிடைக்கும் மழை நீரைக் கொண்டு, விதைப்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக முன்கூட்டியே வயலை நன்கு உழுது தயார் படுத்தி வைப்பது சாலச் சிறந்தது ஆகும்.

நிலத்தின் சரிவுக்கு குறுக்கே கொடை உழவு செய்வதால் தற்போது பெய்யும் மழைநீரை அந்தந்த வயல் பகுதியிலேயே நிலத்தடி நீராகச் சேமிக்க முடியும். எதிர் வரும் பருவத்திற்கு சாகுபடி நிலத்தில் களைகள் கட்டுப் படும். மண்ணில் இருக்கும் கூட்டுப் புழுக்கள் அழிக்கப்படும். மண் மூலம் பரவும் பூஞ்சான நோய்க் கிருமிகள் அழிக்கப்படும். மேலும் உழவு செய்யும்முன்பு மண் மாதிரியை தேவையான அளவுக்கு வயலின் வெவ்வேறு பகுதிகளில் எடுத்து, பெரம்பலூர் மண் பரிசோதனை நிலையத்திற்கு எடுத்துசென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

பின்னர் பரிசோதனை முடிவுகளின் படி மண்ணிற்கு தேவையான அங்ககச் சத்துக்கள் எவை, எவை என்பதை வேளாண்மைத் துறையினர் மூலம் கேட்டு, அதற்கு ஏற்ப உரம் இடுவதால் உரச்செலவைக் குறைத்து, அதிக மகசூல் எடுக்கலாம். மேலும் விதைப்புக்கு தரமான சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டும். சான்று பெற்ற விதைகளே அதிகமான மகசூலுக்கு ஆதாரம். பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் நெல், சிறுதானியம், உளுந்து, துவரை, ஆமணக்கு, நிலக் கடலை, எள்ளு போன்ற விதைகளை விதைக்க முற்பட்டால், அதற்கு தரமான சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தினால் அதிக மகசூல் பெறலாம். விதை மாதிரிகள் எடுத்து விதைப் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி பரிசோதனையில் தேர்ச்சி பெற்ற விதைகளென சான்றட்டை பொருத்தி விற்பனை செய்யப்படும் விதைகளே தரமான விதைகள். அவற்றைப் பயன் படுத்தினால் அதிக மகசூல் பெறலாம்.

போலி விதைகளை தரங்கண்டு அவற்றை தவிர்க்க வேண்டும். மேலும் தற்போது சாகுபடி செய்ய நெல் குறுவை இரகங்கள் ஆடுதுறை 45, 53, 57, 37, கோ 51, 55, திருச்சி 5, அம்பாசமுத்திரம் 16, டி.பி.எஸ் 5 போன்ற நெல் இரகங்களை சாகுபடி செய்யலாம். குதிரைவாலி மதுரை 1, கேழ்வரகு கோ 15, உளுந்து - வம்பான் 10, 11, 8, நிலக்கடலை - ஜி. ஜே. ஜி 9, விருத்தாச்சலம்- 10, எள்ளு விருத்தாச்சலம்- 4, திண்டிவனம் 4, 7 போன்ற சான்று பெற்ற இரங்கலை சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.