Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுl சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2-ம் இடம் பிடித்து சாதனை

பெரம்பலூர், ஆக. 12: தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாவட்ட அளவில் இரண்டாம் பரிசினை வென்று சாதனை படைத்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை அதிக அளவில் ஏற்படுத்தி போதையில்லா சமூகத்தை உருவாக்கும் நோக்கில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்காக பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட அளவிலான இரண்டாம் பரிசு (கோப்பை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்) இக்கல்லூரிக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டு விருதினைப் பெற்றுக் கொண்டனர்.

2025- 2026 கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருளின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்து பெரம்பலூர் மாவட்டத்திற்குச் சிறப்பாகச் சேவை செய்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இச்சாதனையைப் படைத்த கல்லூரி முதல்வர், துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாணவ, மாணவிகளைத் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் உயர்திரு. அ. சீனிவாசன் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் இயக்குநர் உயர்திரு. P. ராஜபூபதி உடனிருந்தார். மேலும் கல்லூரி முதல்வர் உடனிருந்தார்.

முன்னதாக இக்கல்லூரியைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ‘எனது இல்லம் போதையில்லா இல்லம், எனது கல்லூரி போதையில்லா கல்லூரி, எனது தமிழ்நாடு போதையில்லா தமிழ்நாடு, எனது இந்தியா போதையில்லா இந்தியா; போதையில்லா வாழ்க்கையே ஆரோக்கியமான, சந்தோஷமான வாழ்க்கை’ என விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அப்போது பேசிய மாண்பமை வேந்தர் உயர்திரு. அ. சீனிவாசன், “நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருங்கேடு விளைவிக்கும் போதைப்பொருட்களைத் தடுத்து நிறுத்துவதோடு, அவற்றை முழுமையாக ஒழிக்க நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் சூழலைத் தவிர்த்து, ஆரோக்கியமான உடல் மற்றும் சமூகத்தை உருவாக்க ஒவ்வொருவரும் முழு வீச்சில் முயற்சிக்க வேண்டும். உங்களை நம்பி பல ஆயிரம் கனவுகளோடு உங்களை இங்கு படிக்க அனுப்பிய உங்கள் பெற்றோர்களின் தியாகத்தை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். சில நிமிட மயக்கத்திற்காகவும், தவறான நண்பர்களின் தூண்டுதலுக்காகவும் உங்களின் விலைமதிப்பற்ற எதிர்காலத்தையும், குடும்பத்தின் மகிழ்ச்சியையும் சிதைத்துக்கொள்ள வேண்டாம். கல்வி என்பது உங்களுக்கு பட்டங்களை மட்டும் தருவதல்ல; அது நல்லது எது, கெட்டது எது என்பதைப் பகுத்தறியும் தெளிவைத் தரக்கூடிய ஆயுதம். போதை அந்தத் தெளிவான சிந்தனையை மழுங்கடித்து, மனிதனை அடிமையாக்கிவிடும். சுதந்திரமான சிந்தனையும், ஆரோக்கியமான உடலும் கொண்ட இளைஞர்களால் மட்டுமே இந்த தேசத்தை வல்லரசாக்க முடியும் என்றார்.