பெரம்பலூர், நவ. 3: பெரம்பலூரில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்கு சென்று இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் நாளை முதல் 4, 5, 6 ஆகிய தேதிகளில் விநியோகம் செய்யப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் இல்லம் தேடி பொது விநியோகத் திட்டப் பொருட்கள் நவம்பர் மாதத்திற்கு நாளை முதல் 4,5,6ம் ஆகிய தேதிகளில் குடிமைப் பொருட்கள் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கே சென்று வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்திருப்பதாவது: தமிழக அரசு ஆணையின்படி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் வீடுகளுக்கே சென்று குடிமைப் பொருட்களை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் பெரம்பலூர் வட்டத்தில் 5,194 நபர்களும், ஆலத்தூர் வட்டத்தில் 4,185 நபர்களும், குன்னம் வட்டத்தில் 5,230 நபர்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 5,047 நபர்களும் என மொத்தம் 19,656 நபர்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் நவம்பர் மாதத்திற்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் வீடுகளுக்கே சென்று குடிமைப் பொருட்களை நாளை முதல் 4, 5, 6 ஆகிய தேதிகளில் வழங்கப்படவுள்ளது. எனவே, இல்லம் தேடி பொது விநியோகத் திட்டப் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தின் மூலம் பயன் பெறும் குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இத்தகவலை மாவட்ட கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.


