பெரம்பலூர், நவ. 2: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் 24வது தவணையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலம் பனாஸ்கந்தாவில் வெளியிட்ட நிகழ்ச்சி திரையிடப்பட்டது. இதன்மூலம் நாடு முழுவதும் 9.34 கோடிக்கும் மேற்பட்ட தகுதியுள்ள விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு ரூ. 18,690 கோடிக்கும் மேற்பட்ட தொகை நேரடிப் பலன் பரிமாற்றம் முறையில் செலுத்தப்பட்டது. தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ6,000 மூன்று சம தவணைகளாக, தலா ரூ.2,000 வீதம் வழங்கப்படுகிறது. இதுவரை முதல் 23 தவணைகள் மூலம் ரூ. 4.47 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட தொகை வழங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பு வாலிகண்டபுரம் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் விவசாயிகளுக்குக் காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு PM-KISAN திட்டத்தின் நோக்கம், முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்கள் குறித்து வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் (பொ) புனிதாவதி எடுத்துரைத்தார்.
மேலும், தகுதியுள்ள விவசாயிகள் திட்டத்தில் பயன் பெறுவதற்காக e-KYC உள்ளிட்ட தேவையான விவரங்களை சரிபார்த்து, ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு மற்றும் பயனாளர் நிலையை அதிகாரப்பூர்வ PM-KISAN இணையதளத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.மேலும், ரபி பருவத்திற்கான பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றிய தொழில்நுட்பத் தகவலை தோமினிக் மனோஜ் என்பவரும், மண் வள மேலாண்மை பற்றி, ஆய்வக தொழில் நுட்பவியலாளர் சதீஸ்குமார் என்பவரும் எடுத்துரைத்தனர்.இந்நிகழ்ச்சியில், ‘விளைநிலம் காப்போம்’ இயக்கத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு பலமரக் கன்றுகள் மற்றும் விதை தொகுப்பும் வழங்கப்பட்டது. முடிவில் வித்யா நன்றி கூறினார். அரியலூரில்


