Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பயன்பாட்டுக்கு வராத நூலக வாசலில் குடிமகன்கள் மது அருந்தி கொண்டாட்டம்

ஜெயங்கொண்டம். ஜூலை 1: ஜெயங்கொண்டம் அருகே பூட்டி கிடக்கும் ஊர்ப் புற நூலகம். இதனால் மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தங்களை தயார் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் உள்ள குருவாலப்பர் கோவில் ஊராட்சியில் ஊர் புற நூலகம் குழந்தைகள் மற்றும் இளைஞர் நலங்களுக்காக கடந்த 2023-2024ம் ஆண்டு 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த நூலகம் கடந்த சில மாதங்களாகவே பூட்டியே கிடக்கிறது. எப்போது பார்த்தாலும் இந்த நூலகத்தின் வாசற்படிகளில் ஆடு, மாடுகளும் மற்றும் இரவு நேரங்களில் மது பிரியர்களின் புகலிடமாக இயங்கி வருகிறது. இந்தப் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பள்ளிகளிலும் கல்லூரியிலும் பயின்று வருகின்றனர். மேலும் இந்தப் பகுதியில் விவசாயிகளும் வசிக்கின்றனர்.

மாணவர்களின் எதிர்காலத்தை முன்னிட்டு தான் இது போன்ற ஊர் புற நூலகங்கள், பகுதிநேர நூலகங்கள், நூலகங்கள் என திறக்கப்படுகிறது. ஆனால் இந்த ஊராட்சியில் உள்ள நூலகம் திறப்பு விழாவின்போது மட்டுமே திறந்திருந்ததாக இந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் கூறுகின்றனர். குருவாலப்பர் கோயில் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. பகல் நேரங்களில் வேலைக்கு வயலுக்கு செல்ல முடியாதவர்கள் முதியவர்கள் விவசாயிகள் அன்றாட நாளிதழ்களை படித்து நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வது வழக்கம். முதியவர்களின் பொழுதுபோக்கே நாளிதழ் தான். ஆனால் நூலகம் திறந்திருப்பது இல்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராக முடியாமல் இதுபோன்று மூடியே கிடைக்கும் நூலகத்தை தினம் வந்து பார்த்து செல்வது வழக்கமாக உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள மாணவர்கள் நூலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால் ஜெயங்கொண்டம் பகுதிக்கு தான் செல்ல வேண்டும். இதனால் கால விரயமாகிறது. விவசாயிகள் வேலையில்லாத நேரத்தில் நூலகத்திற்கு சென்று அன்றாட நாளிதழ் மற்றும் புத்தகங்களை படிப்பது வழக்கமாக கொண்டுள்ளனர். இங்கு ஊர் புற நூலகம் இருந்தும் படிக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாணவர்களின் எதிர்காலத்தை முன்னிட்டு சில ஊராட்சிகளில் ஊர் புற நூலகமும் பகுதி நேர நூலகமும் திறக்கப்படுகிறது. ஆனால் இங்கு நூலகமே திறக்கப்படுவதில்லை இதனால் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக வருகிறது.

இந்த ஊர் புற நூலகம் திறக்காமல் இருப்பதால், இங்கே கால்நடைகள் ஆடு, மாடுகள் வந்து படுத்து கொள்கிறது. மேலும் இரவு நேரங்களில் மது பிரியர்களின் புகலிடமாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் ஊர் புற நூலகத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தினந்தோறும் அன்றாடம் வருகின்ற நாளிதழ்களையும் வழங்க வேண்டும் என்றும் இந்த பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.