ஊட்டி,செப்.29: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.இத்திட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 22ம் தேதி அன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றில் 4.20 லட்சம் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. இதன்மூலம், பாதுகாப்பான பிரசவம் மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளின் பிறப்பை உறுதி செய்வதில் பொது சுகாதார அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
அதற்கென தனித்துவமான வரிசை எண்ணும்,சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகமும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 1 லட்சத்து 28 ஆயிரத்து 449 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள். PICME-யில் பதிவு செய்யப்பட்டு ஊர் அடையாள எண் உள்ளவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம் ஊட்டி சேட் நினைவு அரசு மருத்துவமனையில் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தினை வழங்கினார். இத்திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் சுமார் 615 தகுதியான குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்ட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வின் போது, ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் னிவாசன், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் ராஜசேகரன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம், ஊட்டி ஆர்டிஓ டினு அரவிந்த், மருத்துவர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

