Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தாவரவியல் பூங்கா நுழைவாயில் இருந்த மேரிகோல்டு மலர்களும் அழுகின

ஊட்டி, ஜூன் 24: ஊட்டி தாவரவியல் பூங்கா நுழைவாயில் பகுதியில் இருந்த மேரிகோல்டு மலர்களும் அழுகி உதிர துவங்கியுள்ளன. ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனுக்காக 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டிருந்தன. பொதுவாக, டிசம்பர் மாதம் முதல் மலர் செடிகள் நடவு பணிகள் துவங்கும். இம்முறை சற்று தாமதமாக துவக்கியதால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பூங்காவில் பெரும்பாலான செடிகளில் மலர்கள் பூத்து காணப்பட்டது. தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பகுதியிலும் நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டிருந்த பாத்திகளில் நடவு செய்யப்பட்டிருந்த மேரிகோல்டு மலர்கள் கடந்த மாதம் முதலே மலர்ந்தன.

மேலும், பூங்காவில் வைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரங்கள் மற்றும் பாத்திகளில் வைக்கப்பட்டிருந்த மலர்கள் வாடிய நிலையில் இருந்த மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வந்தன. கடந்த ஒரு மாத காலமாக இந்த மலர்கள் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் பூத்து காணப்பட்டன. இதனை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில், ஊட்டியில் அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக இந்த மலர்கள் தற்போது அழுகி உதிர்ந்து விட்டன. இதனால், மலர் அலங்காரம் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. இனி பூங்காவில் வரும் அக்டோபர் மாதமே மலர்களை காண முடியும். அதுவரை கண்ணாடி மாளிகையில் உள்ள மலர் அலங்காரங்களை மட்டுமே சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ வாய்ப்புள்ளது.