Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மஞ்சூரில் தேயிலை மகசூல் அதிகரிப்பு

மஞ்சூர், ஜூலை 21: மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளதால் கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் தேயிலைதூள் உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கியத்தொழிலாக உள்ளது. குறிப்பாக மஞ்சூர் சுற்றியுள்ள குந்தா பகுதியில் 70 சதவீதத்திற்கும் மேல் தேயிலை விவசாயம் உள்ளது. இதை முன்னிட்டு மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார், மேற்குநாடு, நஞ்சநாடு ஆகிய 8 கூட்டுறவு ஆலைகள் இயங்கி வருகிறது.

இது தவிர, ஏராளமான தனியார் தொழிற்சாலைகளும் உள்ளது. இந்நிலையில் நடப்பாண்டு துவக்கத்தில் இருந்து 4 மாதங்களுக்கும் மேலாக போதிய மழை பெய்யாததால் வறட்சி நிலவியது. இதனால், தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டது.

குறிப்பாக குந்தா பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகரித்ததால் பசுந்தேயிலை வரத்து பல மடங்கு குறைந்து போனது. மேலும் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தேயிலை தோட்டங்களில் சிவப்பு சிலந்தி நோய் தாக்குதலும் ஏற்பட்டது. இதன் காரணமாக, தொழிற்சாலைகளில் தேயிலைதூள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் பரவலாக நல்ல மழை பெய்தது. இடையே, இடையே நல்ல வெயிலும் காணப்பட்டது. தேயிலை விவசாயத்திற்கேற்ற சீதோஷ்ண நிலை காரணமாக கடந்த சில வாரங்களாக தேயிலை மகசூல் படி, படியாக அதிகரித்தது.

தற்போது பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கும் தினசரி 18 ஆயிரம் கிலோ முதல் 20 ஆயிரம் கிலோவிற்கும் மேல் பசுந்தேயிலை வரத்து உள்ளதாக கூறப்படுகிறது. மஞ்சூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் சராசரியாக 20 ஆயிரம் முதல் 22 ஆயிரம் கிலோ வரை பசுந்தேயிலை வரத்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் தேயிலைதூள் உற்பத்தி அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் பசுந்தேயிலை வரத்து மேலும் அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.