Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

குன்னூர் சுற்றுலா தலங்களில் காட்டுமாடுகளை போட்டோ எடுப்பதால் அபாயம்

குன்னூர்,ஜூன்8: குன்னூர் சுற்றுலா தலங்களில் உலா வரும் காட்டுமாடுகளை போட்டோ மற்றும் செல்பி எடுக்கும் பயணிகளால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வனத்துறைக்குச் சொந்தமான லாம்ஸ்ராக் மற்றும் டால்பின்நோஸ் ஆகிய சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடங்களைக் காண்பதற்கு உள்ளூர் மட்டுமின்றி,வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

சமீபகாலமாக, இந்த சுற்றுலா தலங்களின் நடைபாதை மற்றும் முக்கியப் பகுதிகளில் காட்டுமாடுகள் அடிக்கடி உலா வருகின்றன. வனப்பகுதியையொட்டியுள்ள இந்த இடங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அங்கு வரும் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பெரும் அச்சமடைந்துள்ளனர். அங்கு வரும் சில சுற்றுலா பயணிகள் எவ்வித பாதுகாப்பு உணர்வும் இன்றி, காட்டுமாடுகளின் மிக அருகில் சென்று புகைப்படம் எடுப்பது மற்றும் செல்பி எடுப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டுமாடு ஒன்று மிக அருகில் நின்று கொண்டிருக்கும்போதே, சுற்றுலா பயணிகள் தங்களது மொபைல் போன்களில் புகைப்படம் எடுத்தபடி அலட்சியமாக நடந்து செல்கின்றனர்.

காட்டுமாடுகள் பொதுவாக அமைதியாகக் காணப்பட்டாலும், மனிதர்களின் இத்தகைய அத்துமீறல்களால் அவை எப்போது வேண்டுமானாலும் ஆக்ரோஷமாக தாக்கக்கூடும். இதனால் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக உள்ளூர் பயணிகள் தெரிவிக்கின்றனர். எனவே, அசம்பாவிதங்கள் ஏதேனும் நிகழும் முன், சம்பந்தப்பட்ட வனத்துறையினர் லாம்ஸ்ராக் மற்றும் டால்பின்நோஸ் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும். விதிகளை மீறி வனவிலங்குகளுக்கு மிக அருகில் சென்று செல்பி எடுக்கும் மற்றும் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்ளும் சுற்றுலா பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் உள்ளும் சுற்றுலா பயணிகள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.