Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சேரம்பாடியில் இருந்து பாட்டவயல் வரை கடந்த ஆட்சியில் இயக்கப்பட்ட மினி பேருந்து எங்கே.?

பந்தலூர்,ஜூன்8: பந்தலூர் அருகே கொளபள்ளி, மழவன் சேரம்பாடி, புஞ்சகொல்லி, காரகொல்லி, சபுந்தோடு ஆகிய கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் ஏராளமானோர் தமிழக அரசு தேயிலைத் தோட்டக் கழகம் டேன்டீ மற்றும் தனியார் தேயிலைத் தோட்டங்களில் கூலித் தொழிலாளர்களாக பணி புரிந்து வருகின்றனர். மேலும், இப்பகுதியில் 8 பழங்குடியின கிராமங்களும் அமைந்துள்ளது.

இப்பகுதி மக்களின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்ய முறையான பேருந்து வசதிகள் எதுவும் இல்லை. கடந்த ஆட்சியின்போது, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சேரம்பாடியில் இருந்து பாட்டவயல் வரை தனியார் மினி பேருந்து ஒன்று இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த மினி பேருந்து இப்பகுதி மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக இந்த தனியார் மினி பேருந்து எவ்வித அறிவிப்புமின்றி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்குக் கடை வீதிகளுக்கு செல்வதற்கு மற்றும் அவசர மருத்துவத் தேவைகளுக்கு வாகன வசதி இல்லாமல் பல கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் பகல் நேரங்களிலேயே காட்டு யானைகளின் நடமாட்டம் மிக அதிகமாகக் காணப்படுகிறது. வாகன வசதி இல்லாததால், பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அச்சத்துடன் சாலைகளில் நடந்து செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. எந்த நேரத்திலும் யானை தாக்கும் அபாயம் உள்ளதால் இப்பகுதிக்கு மினி பேருந்து வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.