கோத்தகிரி, செப்.28: கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முறையாக பெய்யாததால் வனப்பகுதியில் உள்ள தாவரங்கள், செடி,கொடிகள் கருக துவங்கி உள்ளது. இதனால் வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு ஏற்றார் போல் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வன விலங்குகள் இடம்பெயர்ந்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தேயிலை மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட சில இடங்களில் யானைகள் கூட்டம் கூட்டமாக குட்டிகளுடன் கிராம பகுதிக்குள் நுழைந்து விலைப் பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. நேற்று சிறியூர் வனப்பகுதியில் இருந்து இரண்டு காட்டுயானைகள் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோத்தகிரி அருகே உள்ள சுண்டட்டி கிராமத்தில் உள்ள தேயிலை தோட்ட பகுதிக்குள் நுழைந்துள்ளது.
இந்த யானை கூட்டம் கிராமத்திற்குள் நுழைந்து, தேயிலை தோட்ட பகுதியில் முகாமிட்டு உள்ளது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் உலா வருவதை கண்டால் உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் காட்டு யானைகளின் நடமாட்டம் உள்ளதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்ல அச்சமடைந்துள்ளனர்.

