Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் பெரியார் நூற்றாண்டு நினைவு தூணை மறைத்து தவெக பேனர்

ஊட்டி, ஜூலை 23: தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து எவ்வித அரசு சார்ந்த பொறுப்பிலும் இல்லாத தவெக நிர்வாகிகள் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகளுக்கு சென்று ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள், ஊழியர்களிடம் கேள்வி எழுப்புவதுடன், அதனை சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களாக பதிவேற்றம் செய்வது பரவலாக கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. தவெக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியாக உள்ள நிலையில், தவெக சார்பில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், ஊட்டி நகரின் முக்கிய பகுதிகளில் பிரமாண்ட டிஜிட்டல் பேனர்களை வைத்துள்ளனர். ஊட்டி நகரத்தின் பிரதான சந்திப்பான சேரிங்கிராஸ் பகுதியில் பெரியார் நூற்றாண்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள நினைவு தூண் உள்ளது. அந்த நினைவுத் தூணை முழுமையாக மறைக்கும் வகையில் தவெகவினர் பேனர் அமைத்துள்ளனர். தவெகவினரின் இந்த செயல் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘தவெக தனது கொள்கைத் தலைவர்களில் ஒருவராக பெரியாரை அறிவித்துவிட்டு, அவரது நினைவுத் தூணையே மறைத்து விளம்பர பேனர் வைத்திருப்பது முரண்பாடாக உள்ளது. தவெகவினர் தங்கள் கொள்கைத் தலைவருக்கு கொடுக்கும் மரியாதை இவ்வளவுதான். மற்ற அரசியல் கட்சிகள் செய்ய துணியாத அனைத்தையும் தவெகவினர் செய்கின்றனர். கல்வி மற்றும் மாநில உரிமைக்கான போராட்டங்களில் தமிழ்நாடுதான் எப்போதும் முன் நிற்கும். ஆனால் தற்போது மேகதாது அணை விவகாரம், நீட் ஆள் மாறாட்ட பிரச்னையை எதிர்த்து போராட்டம் என பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில், அதனை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது’’ என்றனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுத் தூணை மறைக்கும் வகையில் வைக்கப்பட்ட பேனரை உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.